குழந்தையின் அழுகை சொல்லும் செய்தி என்ன?

0
188
குழந்தை என்பது அன்பு, மகிழ்வு, உரிமை, உயிர் உறவு. கூடவே, மிகப் பெரிய பொறுப்பு. பச்சிளம் சிசு முதல், பதின் பருவம் வரை குழந்தை வளர்ப்பின் ஒவ்வொரு படியையும் கவனம் நிரப்பிக் கடக்க வேண்டும் பெற்றோர்! பிறந்த குழந்தையைப் பொறுத்தவரையில்… அதன் அழுகைதான் பல மம்மி களுக்கு அலர்ஜியான விஷயம்!

ஆனால், ''அது ஒரு அற்புதமான மொழி… அதைப் புரிந்து கொள்வதில்தான் இருக்கிறது குழந்தை வளர்ப்பின் சூட்சமம்'' என்று சொல்லும் சென்னை, எழும்பூர், குழந்தை நல மருத்துவமனையின் பதிவாளர் மற்றும் டாக்டர் ஸ்ரீனிவாசன், அந்த மொழியைப் புரிந்து கொள்ளும் சூத்திரங்களைப் பற்றி பேசுகிறார் இங்கே…

''குழந்தை அழும்போது, என்னவோ ஏதோவென்று அதைவிட அதிகமாக தவித்துப்போகும் தாய் மனது. ஆனால், அதற்கான காரணத்தைப் புரிந்துகொண்டு சரிசெய்தால், குழந்தையின் அழுகை நிற்கும், அம்மாவுக்கும் நிம்மதி பிறக்கும்!

பொதுவாக, தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வெளிவந்ததும் அழும் முதல் அழுகையை, மருத்துவத்தில் 'குட் சைன்' என்போம். அதுவரை தொப்புள்கொடி மூலமாகவே, ஆக்ஸிஜன் தேவைகளை எடுத்து வந்த குழந்தை, வெளியுலகத்துக்கு வந்தபின் முதல் முறையாக தானே சுவாசிக்க ஆரம்பிக்கும். அப்போது செயல்படத்துவங்கும் அதன் நுரையீரலின் சங்கிலித் தொடர் நிகழ்வுதான்… குழந்தையின் அழுகை. எனவே, பிறந்தவுடன் குழந்தை குரலெடுத்து அழுதால்தான்… சுவாசம் ஆரோக்கியமானதாக இருக்கிறது என்று அர்த்தம். எனவே, இது 'நார்மல் க்ரை' (Normal cry).