கிறீன் ரீ மோகம் இப்பொழுது பலரையும் ஆட்டிப் படைக்கிறது. அதிலும் முக்கியமாகப் பெண்களும் யுவதிகளும் அடிக்கடி கிறீன் ரீ பற்றிக் கேட்கிறார்கள். அதிலும் முக்கியமாக எடையைக் குறைக்க வேண்டும் என்பதில் ஆர்வமுள்ளவர்கள் கேட்கிறார்கள். பலர் குடிக்கவும் செய்கிறார்கள்.
இது பல வர்த்தகர்களையும் தொழில் அதிபர்களையும் தங்கள் பொக்கற்றுகளை நிரப்பவும் வர்த்தக முயற்சிகளை மேம்படுத்தவும் உதவியுள்ளது. ஊடகங்களில் அமோகமாக கிறீன் ரீ பற்றி நிதமும் வரும் விளம்பரங்கள் அதைக் குடியாதவர்களையும் குடிக்க வைத்திருக்கிறது. வியாபாரம் அமோகமாகிறது.
ஆனால் அதைக் குடித்தும் பெரும்பாலாரோனது எடை குறைவதாகக் காணோம்.
அதற்குக் காரணம் கிறீன் ரீயின் குறைபாடு அல்ல. குடிப்பவர்களின் சோம்பேறித்தனம்தான். கிறீன் ரீயைக் குடிப்பதால் மட்டும் தங்கள் எடை குறைய வேண்டும் என எண்ணுகிறார்கள். ஆரோக்கியமான உணவுமுறைகளைக் கடைப்பிடிப்பது, உடற் பயிற்சி செய்வது போன்ற சுய முயற்சிகளில் ஈடுபடுவதில்லை என்பதே முக்கிய காரணம்.
புதிய ஆய்வு ஒன்று விஞ்ஞான சஞ்சிகைளில் வெளியாகியுள்ளது. அதைப் பற்றிய செய்தி பரவியதும் பலர் பிளேன் ரீக்கு மாறிவிடக் கூடும்.