தியாகத்தின் மறுபெயர் ஹஜ் கடமை..

0
1969

தியாகத்தின் மறுபெயர் ஹஜ் கடமை..

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும், அல்லாஹுத்தஆலா நபி(ஸல்) அவர்கள் மூலமாக தன் அடியார்களுக்கு ஹஜ்ஜைக் கடமையாக்கினான். நபி(ஸல்) அவர்கள் தன் உம்மத்தினருக்கு ஹஜ்ஜைக் கடமையாக்கினாலும் இதன் பின்னணியில் நபி இபராஹீம்(அலை) அவர்களும், அவர்களின் குடும்பமும் செய்த மாபெரும் தியாகங்கள் மறைந்திருக்கின்றன. அவர்கள் செய்த பல தியாகங்க ள் இன்று நமக்கு ஹஜ்ஜின் கடமையான வணக்கமாக்கப்பட்டிருக்கின்றன.

கஃபா, ஜம்ஜம் கிணறு, ஸஃபா மர்வா மலை, ஜம்ராக்களில் கல்லெறிதல், குர்பானி கொடுத்தல் இவைகள் அனைத்தும் இக்குடும்பம் செய்த தியாகத்தை ஞாபகப்படுத்துகின்றன. கஃபாவை தவாஃப் செய்யாமல், ஸஃபா, மர்வா மலைகளுக்கு இடையில் தொங்கோட்டம் ஓடாமல் யாராவது ஹஜ், உம்ரா செய்ய முடியுமா? வருடத்தில் ஒரு முறை மாத்திரம் அல்ல. ஒவ்வொரு நாளும் இத்தியாகத்தை மக்கள் ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள் செய்த தியாகங்களும் ஹஜ் கடமைகளும் ஜம்ஜம் கிணறும், ஸஃபா மர்வா மலையும் அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்: எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே- தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருக்கின்றேன். எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!‘ (14:37)
மனிதர்களின் வாடையையே உணர முடியாத நேரத்தில் மனித வர்க்கங்களின் ஒரு கூட்டத்தாரை அங்கு கொண்டு வரும்படியும், புற்பூண்டுகளே முளைக்க முடியாத பாலைவனப்பூமியிலே பழவகைகளைக் கொண்டு அம்மக்களுக்கு உணவளிக்கும் படியும் நபி இப்ராஹீம்அலை) அவர்கள் பிரார்த்தனை செய்தது அவர்கள் அல்லாஹுவின் மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை பறைசாற்றுகின்றது. அப்பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்ட காரணத்தினால்தான் இன்று எங்கும் கூடாத அளவுக்கு மக்காவில் கூடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதே போல் உலகத்தில் உள்ள எல்லாப் பழவகைகளையும் மக்காவில் வருடமெல்லாம் பெறமுடிகின்றது.
அல்லாஹுவின் கட்டளைக்கு இணங்க, நீண்ட இடைவெளிக்குப் பின் கிடைத்த தன் மழலைக் குழந்தையையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு மனித சஞ்சாரமற்ற புற்பூண்டுகள்கூட முளைக்க முடியாத பாலைவனத்தில் (இன்று கஃபாவாக இருக்கும் இடத்துக்கு அருகாமையில்) விட்டுவிட்டு கொஞ்சம் பேரீத்தம் பழங்களையும், தண்ணீரையும் அங்கு வைத்து விட்டு நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்று விடுகின்றார்கள். எங்களை தன்னந்தனியே விட்டுவிட்டு எங்கே செல்கின்றீர்கள் என ஹாஜரா அம்மையார் அவர்கள் பல முறை கேட்டும் நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் எந்த விடையும் கொடுக்காத போது அல்லாஹ்வா உங்களை இவ்வாறு செய்யும்படி ஏவினான்? என ஹாஜரா அம்மையார் அவர்கள் மீண்டும் தன் கணவர் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் கேட்டார்கள். ஆம்! என்று அவர்கள் விடை கூறவே, அப்படியானால் அல்லாஹ் எங்களை கைவிடமாட்டான் என்று கூறியவாறு தன் குழந்தையோடு அங்கேயே தன்னந்தனியாக அமர்ந்து விடுகின்றார்கள். நபி இப்ராஹீம்(அலை) தன் குடும்பத்தைப் பார்க்க முடியாத அளவுக்குத் தூரமாகச் சென்று ஒரு மேட்டுப் பகுதியில் கிப்லாவை முன்னோக்கி நின்று மேற்கூறிய பிரார்த்தனையை செய்து விட்டு சென்று விட்டார்கள்.
இருந்த தண்ணீர் முடிந்ததும் தனக்கும் தன் பிள்ளைக்கும் தாகம் ஏற்படவே தண்ணீர் தேடி அலைகின்றார்கள் அன்னை ஹாஜரா அவர்கள், அப்போது அவர்களுக்கு பக்கமாக இருந்த மலை, ஸஃபா மலைதான், யாரையாவது அந்தப்பகுதியில் பார்க்கலாமா என்று நினைத்து ஸஃபா மலைமீது ஏறுகின்றார்கள், அங்கு யாரையும் காணவில்லை. அங்கிருந்து கீழே இறங்கி மர்வா மலைக்குச் செல்கின்றார்கள்.
அங்கு செல்லும் வழியில்தான் ஒரு ஓடையைக் கண்டார்கள். அந்த ஓடையைக் கடப்பதற்காக தன் ஆடையைச் சிறிது உயர்த்திய வண்ணம் வேகமாக அந்த ஓடயைக் கடந்தார்கள். இன்று அந்த இடத்தை சுட்டிக்காட்டுவதற்காக பச்சை நிற மின்விளக்கு பொருத்தப்பட்டிருக்கின்றது. அவ்விடத்தில் ஸஃயீ செய்யும் ஆண்கள் மாத்திரம் சிறிது வேகமாக ஓடுவது சுன்னத்தாக்கப்பட்டிருக்கின்றது. மர்வா மலையை அடைந்த போது அதன்மீது ஏறி மனிதர்களில் யாராவது இருப்பார்களா எனப்பார்த்தார்கள்.
அங்கேயும் யாரையும் காணவில்லை, இப்படி ஏழு முறை செய்தார்கள். கடைசியாக மர்வா மலையில் நிற்கும் போதுதான் தண்ணீர் சத்தத்தைக் கேட்டார்கள். தண்ணீர் சத்தம் எங்கிருந்து வருகின்றது என்பதை உற்றுநோக்கினார்கள். இப்போது ஜம்ஜம் தண்ணீர் கிணறு இருக்கும் இடத்தில் ஜிப்ரயீல்(அலை) அவர்கள் தன் இறக்கையால் தோண்டி அங்கே தண்ணீர் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அங்கே ஓடோடி வந்து தண்ணீர் வெளியில் செல்லாமல் தன் கையால் கட்டினார்கள். அதிலிருந்து தன் பாத்திரத்திலும் தண்ணீரை எடுத்து ஊற்றினார்கள். தண்ணீரை எடுத்து ஊற்றும் போதெல்லாம் தண்ணீர் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: இஸ்மாயீலின் தாய்க்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஜம்ஜம் தண்ணீரை கட்டாமல் விட்டிருந்தால் அல்லது தன் பாத்திரத்தில் அள்ளி ஊற்றாமல் இருந்திருந்தால் ஜம்ஜம் தண்ணீர் ஊற்றெடுத்து ஓடும் ஒன்றாக ஆகியிருக்கும் எனக்கூறினார்கள்.
தண்ணீர் தேடி வந்த ஜுர்ஹும்கோத்திரத்தார் ஹாஜரா அம்மையார் அவர்களிடம் உத்தரவு பெற்று அங்கே குடிபெயர்ந்தார்கள். அல்லாஹ் இப்ராஹீம்(அலை) அவர்களின் துஆவை ஏற்று ஜம்ஜம் கிணறை அன்றிலிருந்து இன்றுவரை வற்றாத கிணறாக ஆக்கியிருக்கின்றான். கஃபா அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, ‘எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்‘ (என்று கூறினார்) (2:127)
இந்த வசனத்தில் அல்லாஹ் இப்ராஹீம்(அலை) மற்றும் இஸ்மாயீல்(அலை) அவர்கள் கஃபாவை கட்டிய செய்தியைக் கூறுகின்றான். மேலே கூறப்பட்ட இரு வசனங்;களின் மூலம் இப்ராஹீம்(அலை) அவர்களின் குடும்பமாகிய இம்மூவரும் செய்த இத்தியாகத்தின் வெளிப்பாடாகவே கஃபா, ஜம்ஜம் கிணறு மற்றும் ஸஃபா மர்வா என்னும் மாபெரும் நினைவுச் சின்னங்கள் உருவாகியிருக்கின்றன. இவைகளை நினைவு கூறாமல் ஹஜ், உம்ரா கடமையை எந்த ஒரு ஹாஜியாவது நிறைவு செய்ய முடியுமா? இது அவர்கள் செய்த தியாகங்களின் பிரதிபலனாகும். மகாமு இப்ராஹீம் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் (இதையும் எண்ணிப் பாருங்கள்; ‘கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை மகாமு இப்ராஹீமை தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்‘ (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம். (அல்குர்ஆன்2:125)
இப்ராஹீம்(அலை) அவர்கள் கஃபாவை எந்தக் கல் மீது நின்று கட்டினார்களோ அதனையே அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான். அதைத் தொழும் இடமாக எடுத்துக் கொள்ளுங்கள் என அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டிருக்கின்றான். எந்த ஒரு ஹாஜியோ அல்லது உம்ராச் செய்பவரோ அல்லது தவாஃப் செய்பவரோ அவர்களின் தவாஃபை முடித்த பின் மகாமு இப்ராஹீமுக்குப் பின் (தவாஃபுக்காக) இரண்டு ரக்அத்துத் தொழுவது சுன்னத்தாக்கப் பட்டிருக்கின்றது. இவ்வாறு ஹஜ்ஜில் செய்யும் பெரும்பகுதியான வணக்கங்கள் அவர்களின் தியாகங்களை ஒவ்வொரு வருடமும் நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இன்னும் அல்லாஹ் அவ்விருவரையும் கஃபாவை தவாஃப் செய்ய வருபவர்களுக்கும், இஃதிகாப் இருப்பவர்களுக்கும் தொழுபவர்களுக்கும் சகல அசுத்தங்களிலிலுருந்தும் சுத்தப் படுத்தும்படியும் உறுதிமொழி வாங்கினான். குர்பானியும் ஜம்ராக்களும் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.
பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்என்னருமை மகனே! நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!‘ (மகன்) கூறினார் என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவராகவே காண்பீர்கள்.ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது நாம் அவரை யா இப்றாஹீம்!என்றழைத்தோம். திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.‘ ‘நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். (அல்குர்ஆன் 37:101 -107) அல்லாஹுத்தஆலா தன் அடியாரான நபி இப்ராஹீம்(அலை) அவர்களுக்கும், அவர்களின் மனைவியையும் மகனையும் மனித நடமாட்டமற்ற இடத்தில் விட்டுவிடும்படி சோதனை செய்து முடித்ததும் அதை விடப்பெரும் சோதனையைக் கொண்டு சோதிக்க ஆரம்பித்தான்.
அதாவது தன் மகன் இஸ்மாயீல்(அலை) அவர்கள் ஓடி விளையாடும் வயதிலே அவர்களை அறுக்கும்படி இப்ராஹீம்(அலை) அவர்கள் ஒரு கனவு கண்டார்கள். (நபிமார்கள் காணும் கனவும் வஹியின் ஒரு வகைதான்) அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக ஒரு கையில் கத்தியையும் மறு கையில் தன் மகனையும் பிடித்துக் கொண்டு இப்ராஹீம்(அலை) அவர்கள் சென்றார்கள். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற முடியாமல் மகனின் பாசம் தன்னைத் தடுத்து விடுமோ என்ற அச்சத்தில் இஸ்மாயீல்(அலை) அவர்களை முகம் குப்புறக் கிடத்தி அறுப்பதற்கு முயலுகின்றார்கள்.
தன் அடியார் இப்ராஹீம்(அலை) அவர்கள் தனது இந்தக் கட்டளையையும் நிறைவேற்றுவதற்கு முன் வந்தபோது அறுப்பதை அல்லாஹ் தடுத்து விடுகின்றான். அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் இப்ராஹீமே!என்றழைத்தோம்.திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும். அல்லாஹ் இதை ஒரு பெரும் சோதனை என்றும் கூறுகின்றான். இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப் பகரமாக சுவர்க்கத்திலிருந்து ஒரு ஆட்டையும் இறக்கிக் கொடுக்கின்றான்.
அதை இப்ராஹீம்(அலை) அவர்கள் அறுத்தார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றாகக் கட்டுப்பட்டார்கள். இதுதான் தியாகம், அல்லாஹ் ஒன்றை ஏவி விட்டால் ஏன் எதற்கு என்று கேட்காமல் உடன் அந்தக் கட்டளைக்கு கீழ் படிய வேண்டும். இதை இப்ராஹீம்(அலை) அவர்கள் முழுமையாக செயல்படுத்திக் காட்டினார்கள். இந்தத் தியாகத்தை ஞாபகம் செய்யும் விதமாக ஹாஜிகளும், ஹஜ்ஜு செய்யாதவர்களும் ஹஜ்ஜுப் பெருநாளன்று ஆடு, மாடு, ஒட்டகங்களை குர்பானி கொடுக்கின்றார்கள்.
இதனால்தான் ஹஜ்ஜுப் பெருநாளை தியாகப் பெருநாள்என்று அழைப்பார்கள். ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாளில் இவ்வாறுதான் அல்லாஹ்வின் கட்டளைக்கு மதிப்பளிக் வேண்டும். அல்லாஹ்வின் சில கட்டளைகளை நிறைவேற்றும் போது நமக்கோ அல்லது நமது குடும்பத்துக்கோ அல்லது நமது பொருளுக்கோ அழிவு வந்துவிடும் என ஷைத்தான் நமது உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடலாம். அந்த எண்ணங்களை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
ஒரு போதும் தன் கட்டளைகளை நிறைவேற்றுபவர்களை அல்லாஹ் இழிவாக்க மாட்டான் என்பது நபி இப்ராஹீம்(அலை) அவர்களும் அவர்களின் குடும்பமும் செய்த தியாகங்களினால் நமக்குக் கிடைக்கும் பெரும் பாடமாகும். ஆகவே அல்லாஹ்வின் அனைத்துக் கட்டளைகளுக்கும் மதிப்பளிப்போமாக.



இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது