இது வேண்டாம்..அது…

0
318
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

ஒரு சின்ன கேள்வியோடு இந்த இடுகையை தொடங்குகிறேன்….

ஹலால், ஹராம் என்ற புரிதல் நமக்கு எந்த வயதிலிருந்து வந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஹராமான, தடுக்கப்பட்ட உணவு என்று சொன்னாலே பலருக்கு உடனே நினைவுக்கு வருவது பன்றியின் இறைச்சியும், மதுவும் தான். பெரும்பாலான முஸ்லிம்கள் பன்றியின் பெயரைக்கூட உச்சரிக்கமாட்டார்கள், பதிலாக 'நாலு கால்' என்றே கூறுவோம் அல்லவா? அந்தளவுக்கு நமக்கு அல்லாஹ் ஹராமக்கியிருக்கும் அந்த இறைச்சியை நாம் வெறுக்கிறோம், அதை வெளிப்படையாக காட்டவும் செய்கிறோம். இந்த ஒரு விஷயம் மட்டும் சிறு வயதிலிருந்தே எல்லார் மனதிலும் ஆணியடித்தார் போல் பதிந்துவிட்டது அல்லவா? ஹராம் வேணாம்… ஹலால் உணவு: ஆனால் ஹராம் என்பது பன்றியின் இறைச்சி மட்டும் தானா? அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அறுக்கப்படாத எந்த ஒரு பிராணியும் நமக்கு தடுக்கப்பட்டவை தானே? நாம் உட்கொள்ளும் உணவு ஹலாலாக இல்லாத பட்சத்தில் நாம் கேட்கும் எந்த துவாவும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்தியா போன்ற பலதரப்பட்ட வழிபாடு, கலாச்சார பின்னணி கொண்ட நாடுகளில் நாம் செல்லும் இடமெல்லாம் ஹலால் உணவு கிடைக்கும் என்பது கேள்விக்குறி தானே? அப்போது என்ன செய்யலாம்? என் அனுபவத்தை பகிர விரும்புகிறேன்.
என்னுடைய மேலாண்மை படிப்புக்காக என்னை விடுதியில் சேர்க்க வந்த என் அம்மா, வாப்பா, வாப்சா, சாச்சி எல்லாரும் மெஸ்ல உள்ள சைவ சாப்பாட்டை வெளுத்துக்கட்ட, நான் மட்டும் செம்ம கடுப்புல ஒரு வாய் சோறு கூட உள்ள இறக்க முடியாம முழிச்சிட்டு இருந்தேன். என்ன காரணமா? அடம்புடிச்சு படிக்க அனுப்ப கேட்ட நானு, அங்க இனி எல்லா நாளுமே சைவம் தான் சாப்பிடணும்னு நினைச்சப்போ அப்படியே கண்ணுல தண்ணி வராத குறை தான். அங்க வாரத்துக்கு ரெண்டு நாள் கோழி போடுவாங்க.. ஆனா அது ஹலால் இல்லையே.. என்ன பண்றது? மூணு வேளையும் கறி கோழின்னு சாப்பிட்டு பழகின நாக்குக்கு வெண்டைக்காயும் அப்பளமும் எப்படி ருசிபடும்? இந்த சிக்கன் 'ஹலாலா'- இல்ல இது 'சிக்கன் மசாலா' (க்ர்ர்ர்ர்ர்ர்) : ஒரு நாள் நாங்க மூணாறு சுற்றுலா போயிருந்தப்போ அங்குள்ள ஒரு உணவகத்துல நான் கேட்டேன் 'சிக்கன் ஹலாலா?' அதுக்கு அவரு ரொம்ப அப்பாவியா சொன்னாரு 'இது சிக்கன் மசாலா'. இது காலேஜுல பயங்கர காமெடியா பரவிடுச்சு. ஆனா அதுல ஒரு நன்மை பாருங்க, ஹலால்னா என்னன்னு தெரியாத பலரும் நம்மகிட்ட வந்து 'ஹலால்னா என்ன?'ன்னு கேப்பாங்க. இதுல என் தோழி ஒருத்தி அவளே பதில் சொல்ல ட்ரை பண்ணினா 'ஹேய், நீங்க ஆடு வெட்டும்போது அதுகிட்ட சாரி கேப்பீங்க, அது தானே ஹலால்?'. சத்தியமா அது இல்ல, ஹலால்னா, இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது, ஒரு ஆட்டை உணவுக்காக அறுக்கும்போது அதை அல்லாஹ்வின் பெயரை சொல்லி கூரிய கத்தியால் கழுத்தில் வெட்டுவது தான் ஹலாலாகும். அப்படி கூரிய கத்தியால வெட்டுவதால் ஒரே கீரலோடு உயிர் போவதுடன் ரத்தம் எல்லாம் வடிந்துவிடும். இறைச்சியை அதனுடைய ரத்தம் இல்லாமல் சாப்பிடுவது தான் நல்லதுன்னு விளக்குவோம். கல்லூரியில், அலுவலகத்தில் – கொஞ்சம் மாத்திக்குவோமே : வாழ்க்கையில் ஒரு கட்டம் வரைக்கும் எல்லாமே நம்முடைய தாய் தந்தையர் ஏற்படுத்தி தந்த ஒரு பாதுக்காப்பான வளையத்துக்குள்ள இருப்போம். ஆனா வளர வளர நாம் அந்த கட்டத்தை விட்டு வெளிவர வேண்டிய சூழல் இருக்கும். அப்போ நமக்கு ரெண்டு ஆப்ஷன்ஸ். ஒரேடியா அந்த வளையத்தை விட்டு வெளியே வருவது, அல்லது நாமும் நமக்கென்று ஒரு வளையத்தை ஏற்படுத்திக்கொள்வது. பள்ளி, கல்லூரி காலம் வரைக்கும் நம்முடைய பெற்றோர் இப்படித்தான் இருக்கனும், இப்படித்தான் தலையில முக்காடு போடனும்னு சொல்லுவாங்க. எப்படியும் நாம் இஸ்லாமிய சூழலில் தான் வளர்க்கப்படுவோம். ஆனா மேற்படிப்பு, வேலைன்னு வரும்போது நாம நம்ம கொள்கைகளை வீட்டோட விட்டுவிடாம அல்லாஹ்வின் துணையோடு உறுதியா பற்றி பிடிச்சிக்கணும்.
அலுவலகத்தில் நமக்குன்னு தொழ ஒரு இடத்தை ஏற்படுத்தி தர கேட்பதில் இருந்து, கை குலுக்குவதை தவிர்ப்பது, தேவையில்லாத சோசியலைசிங்க், அவுட்டிங்க் போன்றவற்றிற்கு செல்லாமல் இருப்பது, வேலை நேரம் போக அதிக வேலைப்பளு இருந்தால் வீட்டில் இருந்தபடி வேலை செய்ய அனுமதி வாங்குவது என்று நாம் தைரியமாக, அதே சமயம் தன்மையாகவும் மேலதிகாரியிடம் கேட்க வேண்டும். வீட்டில் இப்படி வேண்டாம்… பின் எப்படி??? : நாம் வெளியில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தாலும் பிற மஹரமில்லாத ஆண்களுடன் இன்டெராக்ட் செய்யாமல் இருக்க முடியாது. வீட்டுக்கதவை தட்டும் தண்ணி கேன், லான்ட்ரி நபர்களில் இருந்து ஏதாவது ரிப்பேர் வேலை செய்ய வரும் வாட்ச்மேன், எலெக்ட்ரிசியன், ப்ளம்பர்கள் இவர்களில் ஒருவரையாவது நாம் தினமும் சந்திக்க நேரிடும். முடிந்த வரை இவர்களுடனான ஐ கான்டாக்ட், அதாவது நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்து கதவுக்கு பின்னாலிலிருந்தே பதில் சொல்லி அனுப்புவது நலம். அது போல அவர்களுக்கு காசு எதுவும் கொடுக்கும் பட்சத்தில் ஒரு ட்ரேயில் அல்லது பாக்ஸில் வைத்து கொடுப்பதும் நலம். அப்படி தெரிந்தவர்கள் யாரவது வந்தாலும் கூட முடிந்தவரை அவர்களை கணவன்மார் வந்த பிறகு வர சொல்லுவதில் நாம் எந்த வெட்கமும் படக்கூடாது. ஏனெனில் நாம் பயப்படுவது அல்லாஹ் ஒருவனுக்கே, வேறெந்த மனிதர் நம்மை என்ன நினைப்பார் என்ற எண்ணம் நமக்கு இருக்கவே கூடாது. அது போல துணி தைக்க கொடுக்கும்போது முடிந்தவரை நாமே அளவை எடுத்துக்கொண்டு போவது நல்லது. இல்லையென்றால் பெண் ஒருவரை மட்டுமே, அதுவும் தனிமையில் அளவெடுக்க அனுமதிக்க வேண்டும். இது சின்ன விஷயமாக பட்டாலும் நாம் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஆண் மருத்துவரா??? வேண்டாம்… பெண்மருத்துவர்…: இப்படி எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்கும் நாம், மருத்துவர்களிடம் செல்லும்போது கட்டுபாடுகளை சிறிதளவு தளர்த்த வேண்டியிருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் நமது சக்திக்கு மீறி நம்மை சோதிக்க மாட்டான். பெண் மருத்துவர்கள் இல்லாத பட்சத்தில் ஆண் மருத்துவர்களிடம் தான் செல்ல வேண்டியிருக்கும். எப்படியும் பிள்ளைபேறு நேரத்தில் அனெஸ்தெடிக் கொடுக்க ஆண்களே பெரும்பாலும் வருகின்றனர். அத்தகைய சூழ்நிலைகள் தவிர்க்க இயலாதவை. ஆனால் மற்ற நேரங்களில் நாம் கவனமாக இருக்கலாமே! ஸ்கேன் செய்யும் சென்டர்களில் பெண் மருத்துவர்கள் இருக்கும் இடத்தையே மருத்துவரிடம் பரிந்துரைக்க சொல்லலாம். நாம் அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது நமது நிய்யத்தை உறுதியாக, 'யா அல்லாஹ், இதை உனக்காகவே செய்கின்றேன்' என வைத்துக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் நமக்கு துணை புரிவான். இதை என் அனுபவத்தில் இருந்தே சொல்கின்றேன். நவீன கந்துவட்டிக்காரன் வேண்டாம் : இன்றைய காலகட்டத்தில் வட்டி என்பது மிகவும் சாதரணமாகி விட்டது. நாமாக தேடி போகாவிட்டாலும் நம்மை தேடி தலையில் வந்து உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு வட்டி நம்மை சுற்றி வளைத்து விட்டது. க்ரெடிட் கார்ட் வைத்திருந்தவன் எல்லாம் பணக்காரன் என்றிருந்த ஒரு காலம் போய் க்ரெடிட் கார்ட் இல்லையென்றால் ஒரு காரியமும் செய்ய முடியாது என்ற நிலைக்கு எல்லோருமே தள்ளப்பட்டிருக்கிறோம். அதுவும் சும்மா தானே கிடைக்கிறது என்று வாங்கி வைத்துக்கொண்டு அதனால் பல இன்னல்களுக்கு ஆளானோர்களே அதிக‌ம். இதனால் முடிந்த அளவுக்கு அந்த க்ரெடிட் கார்டுகளை வாங்காமல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். சில நிறுவனங்களிலும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யும் இடங்களிலும் க்ரெடிட் கார்ட் இல்லாவிடில் ஒரு வேலையும் நடக்காது. இருந்தாலும் இயன்ற வரை கடனட்டை இல்லாத ஒரு வாழ்க்கை முறையை நாம் பழகிக்கொள்வதே நல்லது. டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவா? கொஞ்சம் உஷார் : அதுபோல, இப்போதெல்லாம் உணவுகள் எல்லாமே வயல்வெளிகளிலிருந்தும் தோட்டங்களிலிருந்தும் வருவதை விட தொழிற்சாலைகளிலிருந்து வருவதே அதிகம். நம் குளிர்சாதனப்பெட்டியை திறந்து பார்த்தாலே தெரியும் டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் உணவுகளை தான் நாம் இன்று அதிகமளவு உட்கொள்கிறோம் என்று. எப்போது கடைக்கு சென்று ஒரு பொருளை வாங்கினாலும் அதிலுள்ள 'இன் க்ரீடியன்ட்ஸ்' ஐ படிப்பது நல்லது. எப்படி படிச்சாலும் அந்த கெமிக்கல் பெயர்கள் ஹலாலா இல்லையான்னு நமக்கு தெரியாதில்லையா? எனக்கு தெரிந்த ஒரு சிம்பிள் ட்ரிக்: முடிந்த அளவு குறைவான உட்பொருட்கள் கொண்ட உணவுகளையே வாங்குங்கள். உதாரணமாக ஒரு பிஸ்கட் பாக்கெட்டில் "மைதா, சர்க்கரை, பால், எண்ணை, சோடா' என இருந்தால் நமக்கே ஒரளவுக்கு தெரியும் அவை ஹலாலாகத்தான் இருக்கக்கூடும் என. அது போல ஜெல்லி வகைகள், கலர் கலரான உணவு வகைகளை அறவே தவிர்ப்பது நலம்.
இதைத்தவிர நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் சில இருக்கு. ஆனால் அதை நாம் மிகவும் லேசாக எடைப்போட்டு விடுகிறோம். பல நேரங்களில் நம் குடும்பத்தினரின் கோபத்தையும் பெற வேண்டிய சூழ்நிலையும் அமைந்துவிடும். ஆனால், நாம் பயப்படுவது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான் என்பதால், நாம் சிறிது கடுமையாக நடந்துக்கொள்வது போல் தெரிந்தாலும் கவலைப்படாமல், உறுதியோடு இருக்கவேண்டும். வீட்டில் அந்நியர் முன் ஹிஜாப்- ரொம்ப சுலபம் தான் : இதில் மிக மிக முக்கியமானது, நம் வீட்டிலேயே இருக்கும் மஹரமில்லாத ஆண்கள். நாம் அதிகம் அறிந்திராத ஹதீஸ் ஒன்று இருக்கிறது, அது என்ன தெரியுமா? "உங்கள் கணவனின் சகோதரர் மரணத்திற்க்கு ஒப்பாவார்" (Sahih Bukhari Hadith5232)
ஆச்சரியமாக இருக்கிறதா? வீட்டுக்கு வெளியே மஹரமில்லாத ஆண்கள் முன்னிலையில் ஹிஜாபை பற்றி கண்டிப்புடன் இருக்கும் நாம், நம் வீட்டிலுள்ள மஹரமில்லாதவர்கள் முன் எவ்வாறு இருக்கிறோம்? என்னதான் வீட்டிலுள்ளவர்கள் ஐந்து வேளை தொழுபவர்களாக இருந்தாலும் கொழுந்தன் தனியாக இருக்கும்போது அவருக்கு உணவு பரிமாற மாட்டேன் என்று சொன்னால் அந்த பெண்ணை ஒரு குற்றவாளியைப்போன்று தான் பார்ப்பார்கள். "அண்ணியென்றால் தாய்க்கு சமம்" என்ற இஸ்லாத்தில் இல்லாத கருத்தை எடுத்துரைப்பார்கள். இந்த நேரத்தில் தான் நாம் அல்லாஹ்வின் உதவியோடு உறுதியாக இருக்க வேண்டும் சகோதரிகளே! அதே நேரத்தில் பொறுமையையும் கையாள வேண்டும். கண்டிப்பாக அவர்கள் முன் நம் ஹிஜாபை பேணத்தான் வேண்டும். ஹிஜாப் என்பது வெறுமனே தலையில் போடும் முக்காடு மட்டுமல்ல. புரிகிறதா? என்னைப்பொறுத்த மட்டில் இதற்கு சுலபமான வழி, சுடிதார் அணியும் பழக்கம் என்றால் ஒரு பெரிய காட்டன் துப்பட்டாவைக்கொண்டு போர்த்திக்கொள்ளலாம், சேலையென்றால் நம் தொழுகைக்கு பயன்படும் மக்கன்னா தான் பெஸ்ட். டக்கென்று மாட்டிக்கொள்ளலாம், வசதியும் கூட. 🙂 இசைக்கு நோ… வேறென்ன செய்யலாம் : பிறகு, அடுத்த முக்கியமானது இசை கேட்பது. இன்றைய காலத்தில் ஒரு முஸ்லிமிடம் இசை ஹராமென்று சொன்னால், என்னது? ஹராமா? யார் சொன்னா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லைன்னு சாதாரணமா சொல்லிட்டு போயிடுவாங்க. வீட்டில் தனியாக இருக்கும்போது போர் அடிக்கிறது, அதான்னு சொல்லி எந்த நேரம் பார்த்தாலும் பாட்டு ஓடிக்கொண்டே இருக்கும், பாங்கு சொல்லும் நேரத்தை தவிர. சினிமாவும் பாடல்களும் நம்மையே அறியாமல் நம் வீட்டோடு ஒன்றாக மாறிவிட்டது. அதை இஸ்லாத்துக்கு எதிரானது என்பதை ஏற்கக்கூட மனமில்லாதவர்களாகத்தான் இன்றைய தலைமுறை இருக்கிறது. தனியாக இருக்கும் பட்சத்தில் பாட்டு கேட்பதற்கு பதிலாக குரான் வசனங்களை கேட்கலாமே? சரி, கவனம் அதில் இருக்காது என்றால் பேசாமல் செய்தி சேனல்களை வைத்துவிட்டு போங்களேன். பாடல்களில் வரும் ஆபாசமான வரிகளையும் நடன வரிகளையும் ஆமோதிக்கும் வகையில் அவற்றைக்கேட்டுக்கொண்டிருந்தால் நம்மை பார்த்து வளரும் நம் குழந்தைக்களுக்கு நாம் என்ன அறிவுரை சொன்னாலும் அது எடுபடாது. நாமே ஆபாசத்தை அனுமதித்துவிட்டு இளைய தலைமுறையை குறை சொல்லகூடாது… என் அனுபவத்தில் வீட்டில் இதை நடைமுறைப்படுத்துவது தான் மிகவும் சவாலான ஒரு விஷயமாக கருதுகிறேன் (நல்லவேளை, வெளிநாட்டில் இருக்கிறோம் என்று ஒரு சின்ன சந்தோஷமும் கூட ) 🙂 எல்லாம் எளிதே… : நம்முடைய மார்க்கம் கடைப்பிடிக்க மிகவும் எளிதானதே. அல்லாஹ் நம்மை படைத்த காரணம், அவன் ஒருவனை வணங்குவதற்காக மட்டுமே. அதை நாம் ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டும். மேற்கூறிய விஷயங்கள் சிறியதாக தெரியலாம். ஆனால் அல்லாஹ்வுக்காக என நாம் ஒரு நிய்யத்தை வைக்கும்போது அதி கிடைக்கும் கூலி நிச்சயமாக அதிகம். அதே போல் இவையெல்லாம் கடைபிடிப்பது பெரிய விஷயமாக தெரியலாம். ஆனால் அல்லாஹ்விற்காக நாம் ஒரு செயலை செய்யும் போது அதற்கான நன்மைகளை மறுமையில் பன்மடங்கு அள்ள முடியும் இன்ஷா அல்லாஹ்…