எங்களுடையது மிகச் சிறிய கார் என்பதால், பெரிய டி.வி.யை அட்டைப் பெட்டி பேக்கிங்குடனேயே காரின் பின்சீட்டில் இடதுபுறம் வைத்துக் கொண்டு, டிக்கியில் கிரைண்டர் மற்றும் மிக்ஸியை போட்டு வைத்திருந்தோம். என் அப்பா டிரைவிங் சீட்டிலும், அவர் அருகே இடதுபுற சீட்டில் அம்மாவும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அம்மா காலடியிலும், மடியிலுமாக ஏகப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் நாங்கள் சென்னையில் வாங்கியிருந்த பொருள்கள் நிறைந்திருந்தன. பின்சீட்டில் பெரிய அட்டைப் பெட்டியில் டி.வி.யும் இடத்தை அடைத்திருந்தது மட்டுமல்லாது, ·ப்ரிஜ் பேக் செய்து வரும் இன்னொரு பெரிய காலி அட்டைப் பெட்டியை நீள்வாக்கில், பட்டையாக மடக்கி, படுக்கைவாட்டில் பின்சீட்டுக்கு நேர் எதிராக நிற்க வைக்கப்பட்டிருந்தது. அதனால், டிரைவர் சீட்டுக்கு பின்புறம் காலியாக இருந்த சீட்டில், என் அப்பாவுக்கு நேர் பின்னால் நான் ஏறி உட்கார்ந்து கொண்டேன். அப்பாவுக்கு நேர் பின்னால்தான் நான் உட்கார்ந்திருந்தேன்
என்றாலும், ·ப்ரிஜ்ஜின் அட்டைப்பெட்டியின் உயரம், காரின் சீலிங் வரை இருந்ததால், முன்சீட்டுக்கும் பி ன்சீட்டுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு திரையாகவே அது அமைந்து விட்டது.
ஒருவழியாக நான் பின்சீட்டில் ஏறி உட்கார்ந்து, கதவையும் லாக் செய்து கொண்டேன். எல்லோரிடமும் விடைபெற்று நாங்கள் கிளம்பி, கார் சில அங்குல தூரம் kooட நகர்ந்திருக்காது… அதற்குள், காரின் பின்னால் கையால் தட்டி நிறுத்தும்படி சைகை செய்தபடியே என் பாட்டி வருவதை சைடிலிருக்கும் கண்ணாடியில் பார்த்து விட்ட என் அப்பா, காரை நிறுத்தினார். நானும் என் பக்க ஜன்னல் கண்ணாடியை கீழே இறக்கி, என்ன நடக்கிறது என்பதை ஆவலுடன் பார்க்கத் தொடங்கினேன். காரணம் என்னவென்றால், எங்கள் பாட்டி வீட்டுப் பக்கத்து வீட்டில் வசிக்கும் மதிவாணன் மாமாவும் அவசரமாக திருச்சி போக வேண்டியிருப்பதால், அவரை எங்கள் காரிலேயே போகும்படி பாட்டி சொல்லியிருக்கிறார். பாட்டி சொன்னபடியால் என் அப்பாவும் சம்மதித்து, மதி மாமாவை பின்சீட்டில் ஏறிக் கொள்ளும்படி சொன்னார்.
ஏற்கனவே பின்சீட்டில் சுத்தமாக இடம் இல்லை… இதில் இவர் வேறா என்று என் மனதுக்குள் நொந்து கொண்டாலும், அப்பா சொல்லிவிட்ட படியால் வேறு வழியில்லாது நானும் கார் லாக்கை திறந்து விட்டு, இன்னும் நன்றாக உள்ளுக்குள் டி.வி. பெட்டியை நெருக்கியபடி உட்கார்ந்தேன். பாட்டிக்கு நன்றி சொல்லிவிட்டு பின்சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்ட மதி மாமாவும் கார் கதவை லாக் செய்து விட்டு, கண்ணாடி ஜன்னலையும் மேலேற்றி விட்டார். பாட்டியிடம் விடைபெற்றுக் கொண்டு, அப்பாவும் காரை நகர்த்த, மெயின் ரோட்டை அடைந்து கார் சற்று வேகம் பிடித்தது.