அக்காவுக்கு இப்போது 45 வயது ஆகிறது. என்னை விட ஐந்து வயது மூத்தவள். பிஸியான தொழிலதிபர். பள்ளி படிப்பை முடிக்கும் போதே அம்மா அப்பா ஒரு விபத்தில் இறந்து விட அந்த வயதிலேயே பிஸ்னஸை பொறுப்பு ஏற்று நடத்தி, கடின உழைப்பால் இன்று அப்பாவின் தொழிலை வெற்றிகரமாக நிலை நிறுத்தி விட்டாள். என்னை அப்பா ஸ்தானத்தில் இருந்து அன்போடு, அரவணைத்து படிக்க வைத்தாள்.
பல நாட்கள் அக்கா எனக்காகவே வாழ்வதை போல் தான் எனக்கு தோன்றியது. அந்த காலத்தில் அக்கா பரபரப்பாக தொழிலில் பிஸியாக இருந்ததால் எங்களுக்குள் வீட்டில் அதிக நெருக்கம் இல்லை என்றாலும், அன்பும், அக்கறையும் அதிகமாகவே இருந்தது. அக்கா தொழிலில் முன்னேறிய ஆகவேண்டும் என்று ஓடி கொண்டு இருந்ததால் அக்காவை நான் வீட்டில் பார்த்த நாட்களும், நேரமும் மிகக் குறைவு தான்.
ஆனால் ஒன்று சொல்வார்கள் தொழில் வாழ்க்கையில் உச்சம் அடைந்தால் சொந்த வாழ்க்கை நீச்சம்பெறும் என்று. இளம் வயதில் நாங்கள் பெற்றோர்களை இழந்தோம். அதை விட சோகம் அக்காவுக்கு திருமண வாழ்க்கை சோபிக்காமல் விவாகரத்தில் முடிந்து போனது. அது நிஜத்தில் அக்காவுக்கு மட்டும் இல்லை எங்கள் குடும்பத்திற்கு மீண்டும் பெரிய இழப்பு தான். உதவிக்கு வந்த உறவினர்கள் கூட ஏதோ முன்னோர்கள் சாபம் என்று தூற்றிவிட்டு தான் சென்றார்கள். அக்காவின் நண்பர்கள் மட்டுமே எங்களுக்கு உதவிய முன் வந்தார்கள்.