“கூல் தண்ணிக்கு மாத்திரமோ..'”என நான் கேட்க முதலே அவள், “கூலாகவும் குடிக்க முடியவில்லை, ஹொட்டாகவும் முடியவில்லை. தேசிக்காய்தண்ணி குடிக்கிறதை அடியோடைவிட்டு பல நாளாச்சு” என்றாள்.
காரணம் ‘பல்லுக் கூசுறது தாங்க முடியவில்லை’; என்றாள்
தனக்கு எவை எவற்றால் பற் கூச்சம் ஏற்படுகிறது என்பதை அவளது அனுபவம் அவளுக்குத் தெளிவாகக் கற்றுத் தந்திருக்கிறது. அவள் கூறியது போலவே குளிரான, சூடான, புளிப்;பான மற்றும் இனிப்பான பானங்களும் உணவு வகைகளும் பற் கூச்சத்தைத் தூண்டி விடக் கூடியவைதான்.
யாருக்கு வருகிறது
பற் கூச்சம் நாங்கள் அடிக்கடி பார்க்கிற பிரச்சனைகளில் ஒன்று. எட்டுப் பேரில் ஒருவருக்கு பற்கூச்சம் இருப்பதாக அண்மையில் அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வு கூறுகிறது. எட்டில் ஒருவருக்கு ஒவ்வொரு நாளும் பல்லுக் கூசிக்கொண்டே இருக்கிறது என்று அர்த்தமில்லை. அடிக்கடியோ இடைக்கிடையோ ஏற்பட்டு மறைந்து மீண்டும் தோன்றுகிறது
.
குழந்தைகளிலும் பதின்ம வயதினரிடையேயும் காண்பது குறைவு. வளர்ந்தோரில் இளவயதினரிடையேதான் அதிகம் இருக்கிறது. அதிலும் 18 முதல் 44 வயதானவர்களுக்கு வயதானவர்களை 3.5 மடங்கு அதிகமாகத் தோன்றுகிறதாம்.