நீங்கள் அப்பாவாவதற்கு உகந்த வயது எது?

0
250

விஞ்ஞான முடிவுகளுடன் முரண்படும் சமூகக் கடப்பாடுகள்
அப்பாவாகப் போவது எப்போது?

ஒரு மனிதன் தந்தையாவதற்கு ஏற்ற வயது என்ன?


எனது பாட்டா அப்பாவாகும்போது வயது 18 வயது மட்டுமே. எனது அப்பா 23 வயதில் அப்பாவானார். அப்பாவாகும்போது எனக்கு 32 வயதாகிவிட்டது. இன்றைய இளைஞர்களுக்கு இன்னமும் அதிக காலம் தேவைப்படுகிறது.

நல்ல கல்வி, போதிய வருவாயுள்ள வேலை, புதிய மணவாழ்வில் சற்றுக் காலம் தொல்லையின்றி உல்லாச வாழ்வு. இவற்றையெல்லாம் முடித்துக் கொண்டு குழந்தை பெறுவதையிட்டு சிந்திக்கத் தொடங்குவதற்கு காலதாமதமாகி விடுகிறது இன்றைய இளைஞர்களுக்கு.

வயது அதிகரிப்பும் அப்பாவாதலும்

மேலும் முதிர்ந்த வயதில் அப்பாவாகும் பலர் மேலை நாடுகளில் இருக்கிறார்கள். வேலைப் பளு, இரண்டாவது தரம் மூன்றாவது தரம் என மணம்முடித்தல் போன்ற காரணங்களால் அங்கு தந்தையாவது தாமதமாகிறது பலருக்கு.

இருந்போதும் இன்னமும் பெரும்பாலானவர்கள் 20 முதல் 34 வயதிலேயே அங்கும் அப்பாவாகிறார்கள். ஆனால் 1980 ற்கும் 2002 ற்கும் இடைப்பட்ட காலத்தில் முதிர்ந்தவர்கள் அப்பாவாகும் தொகை அதிகரிக்க ஆரம்பித்தது. 40 – 44 வயதிற்கும் இடையில் 32 சதவிகிதத்தாலும், 45 – 49 வயதிற்கும் இடையில் 21 சதவிகிதத்தாலும், 50 – 54 வயதிற்கும் இடையில் 9 சதவிகிதத்தாலும் அதிகரிப்பதாக அமெரிக்க National Vital Statistics Report கூறுகிறது. புதிய தரவுகள் மேலும் அதிகரித்திருக்கும் என நம்பலாம்.