பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்

0
248

அ. முஹம்மது கான் பாகவி

முன்பெல்லாம் பெற்றோர்கள் ஏழெட்டுக் குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியோடுதான் வாழ்ந்துவந்தார்கள். பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்த அதேநேரத்தில், கண்டிப்பும் அவர்களது வளர்ப்பில் இருந்தது. பல பிள்ளைகளிடையே பாசம் பகிர்ந்துபோனதாலோ என்னவோ, அளவுக்கதிகமாகச் செல்லம் காட்டியதில்லை. இதனால், பொறுப்புள்ளவர்களாக அவர்களின் பிள்ளைகள் வளர்க்கப்பட்டார்கள். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம்.

ஆனால், இன்று -நாடு பொருளாதார வளர்ச்சி கண்டுவிட்டதாகச் சொல்லப்படும் இந்நாளில்- நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பெரும்பாலோர் இரண்டு குழந்தைகள் மட்டுமே திட்டமிட்டுப் பெற்றுக்கொள்கின்றனர். சிலருக்கு ஒன்றே ஒன்று போதும் என்ற எண்ணம்.

பொருளாதார நெருக்கடி பற்றிய அச்சம், குழந்தை வளர்ப்பிலே முளைத்துள்ள அவநம்பிக்கை, வாழ்க்கையை அனுபவிக்க அதிகக் குழந்தைகள் தடையாகிவிடுவர் என்ற தவறான எண்ணம், பிரச்சினைகளை எதிர்கொள்வதில் ஏற்பட்டுள்ள துணிவின்மை, எல்லாவற்றையும்விட உலகமயமாக்கல் பெற்றெடுத்த நுகர்வுக் கலாசாரம் முதலான பிற்போக்கு அம்சங்களே ஒற்றைக் குழந்தை நாகரிகத்திற்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.

வாரிசுகள் எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டாகச் சுருங்கிவிட்டதால் பெற்றோரின் மொத்தப் பாசமும் ஒன்றிரண்டு குழந்தைகள்மீது மழையாகப் பொழிகிறது. பெற்றோரின அன்பு மழையில் குழந்தைகள் குளித்து, திக்குமுக்காடுகின்றனர். செல்லமோ செல்லம். கண்டிப்பு தேவைதான்; சிறிது பாசமும் காட்டுங்கள் என்று சமூக ஆர்வலர்கள் உபதேசித்த நிலை மாறி, பாசம் காட்ட வேண்டியதுதான்; கொஞ்சம் கண்டிப்பும் தேவை என்று உபதேசிக்க வேண்டிய நிலை வந்துள்ளது.

இளைய தலைமுறை பெற்றோர்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள்; பிள்ளைகள் கேட்பதையெல்லாம் தகுதிக்கு மீறி வாங்கிக்கொடுக்கிறார்கள். ஏன்? எதற்கு? என்று கேட்பதுகூட இல்லை. அல்லது அப்படி கேட்கத் தயங்குகிறார்கள். எங்கே மகன், அல்லது மகள் நம்மை மதிக்கமாட்டார்களோ! நம்மீது கோபப்பட்டுவிடுவார்களோ என்ற பயம்.

பிள்ளைகள் எங்கே போகிறார்கள்; யாருடன் பழகுகிறார்கள்; வீட்டில் சாப்பிடவோ நேரத்திற்கு உறங்கவோ வருவதில்லையே, ஏன்; ஒழுங்காகப் படிக்கிறார்களா? என்ன மதிப்பெண் வாங்குகிறார்கள்; அப்பாவிடம் அல்லது அம்மாவிடம் சண்டைபோட்டு வாங்கும் பாக்கெட் மணியை என்ன செய்கிறார்கள்… என்றெல்லாம் விசாரிப்பதை, இளைய தாய் அல்லது தந்தை அநாகரிகமாகக் கருதுகின்றனர்; பிள்ளைகள் இந்த விசாரணையை அவமானமாகப் பார்க்கின்றனர்; தங்கள் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என்று எண்ணுகின்றனர்.

இன்றைய பிள்ளைகள் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவயப்படுவதும் கொந்தளிப்பதும் பெற்றோர்களின் இந்தக் கண்டுகொள்ளாமைக்கு ஒரு காரணம். இன்றைய புதிய தலைமுறைக்கு அறிவுரை என்றாலே நஞ்சு. ஏன் மதிப்பெண் குறைந்து போய்விட்டது என்று கேட்டுவிட்டால், தற்கொலை முயற்சி, தேர்வில் தோல்வி என்றால் தற்கொலை. ஆசிரியர் திட்டிவிட்டால் பழிவாங்கும் வெறி. நினைத்ததை அனுபவிக்க முடியாவிட்டால், பார்ப்பவர்மீதெல்லாம் எரிச்சல். தவறான உறவுகள், நடத்தைகளைக்கூட யாரும் கண்டித்துவிடக் கூடாது என்ற இறுமாப்பு.

முடிவு, பொறுப்பற்ற ஒரு தலைமுறை உருவாகிவிட்டது. நிதானமோ விவேகமோ இல்லாத, வேகம், சுயநலம், கட்டுப்பாடற்ற போக்கு ஆகிய விரும்பத் தகாத குணங்கள் கொண்ட ஒரு படை வளர்ந்துவிட்டது. மூத்தவர்கள் இவர்களின் நிலை கண்டு அஞ்சிக்கொண்டிருக்க, இவர்களின் வாரிசுகன் எப்படியிருப்பார்களோ என்ற கலக்கம் சீர்திருத்தவாதிகளை வாட்டிக்கொண்டிருக்கிறது.

செலவினங்கள்

தேவைக்காகச் செலவு செய்வது ஒரு ரகம்; தகுதியை உயர்த்திக் காட்ட, நண்பர்களைத் திருப்திப்படுத்த செய்யப்படும் ஆடம்பர வீண்செலவு இன்னொரு ரகம். இன்றைய பிள்ளைகளின் செலவினங்கள் இரண்டாம் ரகம். அலைபேசி, அவசரத் தொடர்புக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு கருவி. அலைபேசியில் சாதாரணமானது முதல் சிறப்பம்சங்கள் நிறைந்த உயர்தரமானதுவரை தொகைக்கேற்ப பல ரகங்கள் கிடைக்கத்தான் செய்கின்றன. அதற்காக 15 ஆயிரம் 20 ஆயிரம் ரூபாய் விலை மதிப்புள்ள பிளாக்பெர்ரிதான் வேண்டும் என்று பிள்ளைகள் அடம்பிடிக்கலாமா? அலைபேசியில், பேசப்பேச விநாடிக்கு விநாடி பணம் செலவாவதைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை. தேவையோ அவசியமோ இல்லாமல் அரட்டையடிப்பதற்கெல்லாம் அலைபேசியைப் பயன்படுத்திவிட்டு, மாதந்தோறும் ரூ.800க்கும் 1000க்கும் ரீசார்ஜ் செய்யப் பெற்றோரிடம் பணம் கேட்பது என்ன நியாயம்? தவறான பயன்பாடுகள் வேறு. வீட்டில் அறுசுவை உணவு காத்திருந்தாலும், உணவகங்களில் சாப்பிடுவதை விரும்பும் பிள்ளைகளை என்ன சொல்ல? அரும்பாடுபட்டுச் சமைத்து வைத்துவிட்டுப் பிள்ளையை எதிர்பார்த்திருக்கும் தாய்க்கு இவன் சொல்லும் பதில், நண்பர்களுடன் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டேன். ஏன்? என்று கேட்கக்கூடாது. கேட்டுவிட்டால் வீட்டில் ஒரே களேபரம். ஹோட்டல் உணவு பணத்திற்கு மட்டுமல்ல; உடல் நலத்திற்கும் கேடு. அங்கு உபயோகப்படுத்தப்படும் எண்ணெய், பொடிகள், தரமற்ற பொருட்கள் எல்லாம் சேர்ந்து இளமையிலேயே முதுமையை உண்டாக்கிவிடும். இது தேவைதானா? மேற்கத்திய உணவு வகைகளெல்லாம் நம் நாட்டு சுகாதார உணவுகளுக்கு முன்னால் நிற்காது. அந்த உணவுகளால் காசுதான் கரையுமே தவிர வயிறும் நிறையாது; ஊட்டமும் கிடைக்காது. போதாக்குறைக்கு, வயிற்றுக்குக் கேடுவேறு. பிறந்தநாள் கொண்டாட்டம் இஸ்லாத்தில் இல்லாத புதுப்பழக்கம்; மேற்கத்திய காலாசாரத்திற்குத் தவறான வழியில் பிறந்த சவலைக் குழந்தை. இன்று பிள்ளைகள் தங்களின் பிறந்தநாளை வெகு விமரிசையாகக் குடும்பத்துடன் கொண்டாடுவது மட்டுமன்றி, நண்பர்களின் பிறந்த நாளுக்காகச் சக்திக்கு மீறி பரிசுப் பொருட்களை அன்பளிக்கின்றனர். பரிசுப் பொருளாவது உபயோகமானதாக இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. உயர்ரக மது பாட்டில்கள், கேமராக்கள், ஆபாச புத்தகங்கள் என மனிதனைக் கெடுக்கும் நச்சுப் பொருட்கள். பொதுவாக பிறந்தநாள், புத்தாண்டு தினம், காதலர் தினம் போன்ற களியாட்டங்களில் நண்பர்கள் ஒன்றுகூடிவிட்டாலே குடியும் கும்மாளமும்தான். இந்த அநியாயத்திற்கும் பெற்றோர் மறுக்காமல் பணம் தர வேண்டுமாம்!