மாதத்தில் ஒரு முறையாவது என்னைப் பார்க்காமல் அவன் இருந்திருக்கமாட்டான். வயிற்றைப் பொத்திக் கொண்டு அவனும், பதறியடித்துக் கொண்டு தாயும் கூட வருவார்கள். பார்க்க எனக்குச் சங்கடமாக இருக்கும்.
ஆனால் அவளோ?
“டொக்டரட்டை மருந்தெடுத்துக் கொண்டுபோய் ஒருக்கால் குடுத்தால்போதும் பிள்ளைக்கு சுகமாகிவிடும்” என எனக்குப் பாராட்டுத் தருவாள்.
பிரச்சனை பாரதூரமில்லை. இதனைத் தாய்க்கு விளக்கியிருந்தபோதும் அவளால் அவனின் வலியைப் பார்த்துக் கொண்டிருக்க முடிவதில்லை.
சின்னப் பையன் 7-8 வயதுதான் இருக்கும். அடிக்கடி வருவது வயிற்று வலிக்காகத்தான். வாயைக் கட்டி இருக்கமாட்டான். வாயைக்கட்டும் வயதில்லைத்தான். இருந்தபோதும் கண்டகண்ட நொறுக்குத் தீனிகளை கண்ட நிண்ட இடங்களில் வாங்கிச் சாப்பிடுவான். வலி தேடி வந்துவிடும்.