முதல் இரவு என்றாலே அன்று நிச்சயம் உடல் உறவு வைத்தாக வேண்டும் என்ற ‘ஐதீகம்’ நம்மிடம் உண்டு. முதலிரவு என்றாலே அது முதல் உறவுக்கான நாள் என்று பொதுவான எண்ணம் நிலவுவதே இதற்குக் காரணம். அன்று நாம் நிச்சயம் உறவு வைத்துக் கொண்டாக வேண்டும். இல்லாவிட்டால் மனைவியோ அல்லது கணவரோ தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்ற பயமும் இதற்கு இன்னொரு காரணம்.
அதேசமயம் முதல் நாளிலேயே உறவு வைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. மன ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி முதலிரவு நாளன்று உறவு வைத்துக் கொள்வதில் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதால் அன்றைய தினம் தவிர்ப்பது என்பதும் நல்ல விஷயம்தான் என்கிறார்கள் டாக்டர்கள்.
குறிப்பாக, பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணம் என்று வரும்போது, அந்த மணமகனும் சரி, மணமகளும் சரி அதற்கு முன்பு வரை பார்த்திருக்க மாட்டார்கள், பேசியிருக்க மாட்டார்கள், இருவருக்குள்ளும் நெருக்கமான நட்பு இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படிப்பட்ட நிலையில் ஒருவிதமான இறுக்கமான மன நிலையுடன்தான் இருவரும் தனியறையில் சந்திக்கிறார்கள். எனவே முதலில் இருவருக்குள்ளும் இருக்கும் இடைவெளியை இட்டு நிரப்பி, அன்னியோன்யத்தை ஏற்படுத்திக் கொள்ள இந்த முதலிரவைப் பயன்படுத்தலாம் என்பது டாக்டர்கள் மட்டுமல்லாமல், மன நல மருத்துவர்களின் அறிவுரையும் கூட.