செண்பகம் அக்கா என் வீட்டு காம்பவுண்டில் குடியிருக்க வந்தவள் தான். புருஷன் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும் அவள் முகத்தில் ஏதோ ஒரு தீரா ஏக்கம்,சோக ரேகை சதா காலமும் காணப்படும். முதலில் அவள் சிடுமூஞ்சி போல தோன்றியதால் நானும் அவளுடன் நெருங்கி பேச பயந்து கொண்டு இருந்தேன. ஆனால் கொஞ்ச நாட்களில் செல்ல செண்பகம் அக்கா என்னைத் தேடி வந்து அவளே அன்போடு பேசுவாள். அவளுக்கு தெரியாத விஷயங்களை பற்றி என்னிடம் கேட்பாள்.
சினிமா,நடிகைகள் பற்றிய கிசுகிசு,விளையாட்டு,உள்ளூர் அரசியல் வரை உலக அரசியல் வரை அவள் படித்த,தெரிந்து கொண்ட விஷயங்களைப் பற்றி என்னோடு விவாதிப்பாள். நான் வீட்டில் தனியாக இருப்பதை எப்படி தான் கண்டு கொள்வாளோ தெரியவில்லை.
ஆனால் சரியான சமயம் பார்த்து தேடி வந்து என்னோடு அரட்டை அடிப்பாள். ஆனால் அவள் சோக கதையை கேட்ட பிறகு தான் அவள் மனசுக்கும் ஏதோ ஒரு ரிலாக்ஸ் தேவைப்படுகிறது. அது என்னோடு பேசுவதில் குறையலாம் என்பதை புரிந்து கொண்டு நானும் அவளோடு அன்பாக பேசி,பழக ஆரம்பித்தேன்.